×

குறளின் குரல்-நீடு வாழ்வார்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

திருப்பூர் கிருஷ்ணன்

நெடுங்காலம் வாழவேண்டும் என்றே மனிதர்கள் ஆசைப் படுகிறார்கள். உடலோடு உயிர் பிணைந்திருக்கிறது. அந்தப் பிணைப்பு நீக்கப்படுவதை ஆழ்மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. மனிதர்கள் என்றல்ல, ஈ, எறும்பு, தாவரம் முதல், எல்லா உயிரினங்களுமே இறுதிவரை வாழ்வதற்கே போராடுகின்றன. தன் முயற்சி எதுவும் பலிக்காமல் போகும்போதே, வேறு வழியின்றி அவை உயிர்விடுகின்றன. உயிருக்கும் உடலுக்குமான பிணைப்பு உலகின் வேறு எந்தப் பிணைப்புகளை விடவும் கூடுதலானது. உலகில் நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி, அதாவது நீடு வாழ்தல் பற்றி வள்ளுவம் பேசுகிறது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்.
(குறள் எண்: 6)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் ஆசைகளின் வழி நம்மை இழுக்கும். அவ்விதம் இழுப்பது அவற்றின் இயற்கை இயல்பு. ஆனால், தீய ஆசைகளை முற்றிலும் அழித்து, பொய்யில்லாத ஒழுக்க நெறியில் வாழ்வோமேயானால், நீண்டகால நல்வாழ்க்கை நமக்குக் கிட்டும். எனவே நீண்ட காலம் வாழ விரும்புகிறவர்கள் ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
(குறள் எண்: 3)

அன்பர்களின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர்கள் இந்தப் புவியில் நெடுங்காலம் வாழ்வார்கள். தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தால், மனக் கவலையின்றி வாழலாம் என்கிறார் வள்ளுவர். இறையருளைச் சார்ந்து வாழும்போது மன அழுத்தம் குறைகிறது. மனக்கவலை இல்லாதவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. பிற நோய்கள் தாக்காது. நோய்களில் பெரும்பாலானவை மனத்தால் உடலில் தோன்றுபவையே. மனக்கவலை இன்றி வாழ்வது, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே வாழ்நாள் நீடிக்கும். ‘உடல் என்னும் வஸ்திரத்தை மனம் உடுத்திக் கொண்டிருக்கிறது’ என எழுதுகிறார் ஜேம்ஸ் ஆலன் நூல்களை மொழிபெயர்த்த வ.உ.சிதம்பரம் பிள்ளை.

மனமே உடலைச் சமைக்கிறது, மனமே உடலை உருவாக்குகிறது. எனவே மனத்தை ஐம்புலன்களின் ஆசைவழிச் செல்லாமல் நாம் கட்டுப்படுத்தும்போது, நிலமிசை நீடு வாழ்தல் என்பது இயல்பானதாகிறது. வரம் கொடுக்கும் தெய்வங்கள், யாருக்கும் நிரந்தரமாக வாழும் வரம் தராது. நீண்ட ஆயுளை ஏதேனும் உபாயத்தின் மீது அடைய முயலலாம் என்றும் நிரந்தரத்தன்மையை யாருக்கும் வரமாக அருளுவதற்கில்லை என்றும் தெய்வங்கள் சொல்வதை நம் புராணங்கள் பதிவு செய்துள்ளன.

பிரம்மதேவனிடம் நித்யத்துவம் என மரணமில்லாமையை வரமாகக் கேட்க எத்தனித்தான் ராவணனின் தம்பி கும்பகர்ணன். அப்படி அந்த அரக்கன் மரணமில்லாமல் வாழ்ந்தால் உலகம் என்னாகும்? தேவர்கள் பதறிப்போய் சரஸ்வதியைச் சரணடைந்தனர். பிரம்மதேவனின் மனைவி சரஸ்வதி தேவி, கும்பகர்ணன் வரம்கேட்கும் நேரத்தில் அவன் நாவைச் சடாரெனப் புரட்டிவிட்டாள். நித்யத்துவம் என வரம் கேட்க நினைத்தவன், நாவிலிருந்து வந்த வார்த்தையோ நித்ரத்துவம் என்பது. நித்ரத்வம் என்றால் நீண்ட நித்திரையில் ஆழ்வது. அந்த வரம் அவனுக்கு அருளப்பட்டது.

ஆறுமாத காலம் உறக்கத்தில் ஆழத் தொடங்கினான் அவன். கும்பகர்ணன் கேட்ட வரத்தைப் போலவே, இரணியன் கேட்ட வரமும் வித்தியாசமானதுதான்.‘மரணமில்லாத் தன்மையை அருள இயலாது, உன் புத்திக் கூர்மையால் வேறு எப்படி வேண்டுமானாலும் வரம் கேட்டு உன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயலலாம்’ என்றார் திருமால். சிந்தனையில் ஆழ்ந்தது இரணியன் உள்ளம். மிகவும் யோசித்து அவன் கேட்ட வரம் தேவர்களையே திகைக்க வைத்தது.

இரவிலோ பகலிலோ, வீட்டுக்குள்ளேயோ வெளியேயோ, மனிதர்களாலோ விலங்குகளாலோ, உயிர் உள்ளதாலோ இல்லாததாலோ, எந்த ஓர் ஆயுதத்தாலோ தன் மரணம் சம்பவிக்கக் கூடாது என வரம் கேட்டான் அவன். உள்ளூர நகைத்தவாறே கடவுள் அந்த வரத்தைத் தந்து மறைந்தார். அவனின் அட்டகாசங்கள் எல்லை மீறியபோது, அவன் மகன் பிரகலாதன் தன்மேல் செலுத்திய பக்தியை மெச்சித் தூணில் நரசிம்மமாகத் தோன்றினார் திருமால். தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டார்.

ஒரு மாலை மயங்கும் நேரத்தில், வாயிற் படியில் வைத்து நகத்தால் இரணியன் உடலைக் கிழித்து வதம் செய்தார். மாலை நேரம் இரவுமல்ல, பகலுமல்ல. வாயில்படி வீட்டின் உள்ளுமல்ல, வெளியுமல்ல. நரசிம்மம் மனிதனுமல்ல, விலங்குமல்ல. நகம் ஆயுதமல்ல. அதற்கு உணர்ச்சி இல்லாததால் அதை உயிருள்ளது என்று சொல்ல முடியாது. அது வளர்வதால் அதை உயிரற்றது என்றும் சொல்ல முடியாது.

எதிரி தடுக்கில் புகுந்தால் இறைவனுக்குக் கோலத்தில் புக முடியாதா என்ன? அண்ட சராசரங்களைக் காக்கும் மாபெரும் இறைச்சக்தி முன், மனித சக்தி எம்மாத்திரம்? நிரந்தரமாக வாழ்வது என்பது தேவர்களின் தன்மை. தொடக்கத்தில் அவர்களுக்கு நிரந்தரத் தன்மை இருக்கவில்லை. அரக்கர்கள் போரிட்டு அவர்களை அழிக்கத் தொடங்கினார்கள். தேவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. திருமாலைப் பிரார்த்தித்து தங்கள் சிக்கலுக்கு ஒரு தீர்வு வேண்டினார்கள் தேவர்கள்.

அமிர்தம் அருந்தினால் நிரந்தரமாக வாழலாம் என்றார் திருமால். அதற்கான உபாயங்களையும் அவரே அருளினார். பாற்கடல் கடையப்பட்டு அதிலிருந்து அமிர்தம் எடுக்கப் பட்டது. திருமால் மோகினி அவதாரம் எடுத்து, சூழ்ச்சியால் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் அளித்து, அசுரர்கள் அதை அருந்தாமல் தடுத்துவிட்டார். பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வை ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரமும் பேசுகிறது.

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே!’

நீண்ட காலம் வாழ்வது என்பது வரமா சாபமா என்ற சிந்தனையும் எழுகிறது. மனக் கவலைகள் ஏதுமில்லாமல் முதுமையால் விளையும் அதிக பாதிப்பு ஏதுமின்றி நீண்ட நாள் வாழ முடிந்தால், அது வரமாகலாம். மற்றபடி நீண்ட கால வாழ்வு என்பதே அலுப்பைத் தரும் அனுபவமாகவும் அமையக் கூடும்.

சுந்தர காண்டத்தில் அனுமனுக்கு சிரஞ்சீவி வரம் தந்து வாழ்த்தினாள் சீதாதேவி. அனுமன் மனம் யோசனையில் ஆழ்ந்தது. கடல் தாண்டி இக்கரை வந்தபோது முதுபெரும் கரடியான ஜாம்பவானைத் தனியே சந்தித்தான் அனுமன். ஜாம்பவான் ஏற்கெனவே சிரஞ்சீவி வரம் பெற்றவர் என்பதை அவன் அறிவான்.

அவரிடம் சிரஞ்சீவி வரத்தால் கிட்டும் லாபமென்ன, நஷ்டமென்ன என வினவினான். ஜாம்பவான் நகைத்தவாறே சொல்லலானார்:‘ஆஞ்சநேயா! வயது கூடக் கூட அறிவு முதிர்கிறது. எனவே மற்றவர் மிக சிரமப்பட்டு அறியும் உண்மைகளை நாம் நம் அறிவின் தீட்சண்யத்தால் எளிதில் புரிந்துகொள்வோம். இது மிகப் பெரும் லாபம். ஆனால், நீண்டநாள் வாழ்வதில் மாபெரும் நஷ்டமொன்றும் இருக்கிறது. நாம் மட்டும்தானே சிரஞ்சீவி? நம் நண்பர்களோ உறவினர்களோ சிரஞ்சீவிகள் இல்லையே? அதனால் அடுத்தடுத்து அவர்கள் நம்மிடம் நிரந்தரமாக விடைபெற்றுச் செல்லும்போது அந்தத் துயரத்தை நாம் தொடர்ந்து சுமக்க வேண்டியிருக்கும்!’

மகான் ராகவேந்திரர், சதாசிவப் பிரம்மேந்திரர் போன்ற மகான்கள், ஜீவசமாதி அடைந்ததை நம் ஆன்மிக வரலாறு சொல்கிறது. ஸ்ரீராகவேந்திரர் மந்திராலயத்தில் தம் ஜீவ சமாதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாமஸ் மன்றோ என்ற ஆங்கிலேயருக்கு ராகவேந்திரர் சமாதியிலிருந்து எழுந்து வெளியே வந்து தரிசனம் தந்து, பின் மீண்டும் சமாதிக்குள் சென்றுவிட்டார் என்ற செய்தி, தாமஸ் மன்றோ வாழ்க்கைச் சரிதத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி அரசாங்க வெளியீடான கெஸட்டிலும் பதிவாகியுள்ளது. சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி, திருச்சி அருகே கரூரை அடுத்துள்ள நெரூரில் அமராவதி ஆற்றங்கரையோரமாக உள்ளது. அங்கே மாலை நேரங்களில் சதாசிவப் பிரம்மேந்திரர் சூட்சும உருவில் நடமாடுவதால், அந்நேரங்களில் அங்கு வருவோர் மெளனம் காக்க வேண்டும் என்ற மரபு அனுசரிக்கப் படுகிறது.

மரணமிலாப் பெருவாழ்வு வாழ முடியும் எனச் சொன்னவர் சூட்சும உருவில் இன்றும் வாழ்பவரும், இவ்வாண்டு இருநூறாம் ஆண்டு காண்பவருமான மகான் வள்ளலார். மாபெரும் ஆன்மிகவாதிகளான திருமூலர், வள்ளலார் போன்றோர் உயர்தர ஆன்மிகக் கருத்துகளைச் சொன்னதோடு நம் உடம்பை எப்படியெல்லாம் பேண வேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் ஆன்மிகக் கருத்துக்களைப் பின்பற்றினால் மட்டும் போதாது.

அவர்கள் சொன்ன உடல்நலக் கருத்துக் களையும் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வு செம்மைப்பட அவர்கள் சொன்ன ஆரோக்கியக் குறிப்புகள் பெரிதும் உதவும். கவிதைகளில் பக்தியைப் பரப்பிய வள்ளலார், உரைநடையில் பற்பல உடல் நலக் குறிப்புகளைக் கொடுத்து உதவியிருக்கிறார். நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. இன்று மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருப்பதால் பலரின் ஆயுள் கூடியுள்ளது.

‘நீடூழி வாழ்க!’ என்றும் ‘தீர்காயுஷ்மான் பவ!’ என்றும் வாழ்த்தும் மரபு நம்மிடம் உண்டு. நூறாண்டு வாழ்தல் என்பது ஒரு சாதனைதான். மனிதர்கள் விரும்பி முயன்று நிகழ்த்தும் சாதனை என்று அதைச் சொல்ல முடியுமா? இயற்கையின் அருளால் கிட்டும் பேறு அது. மகான் ராமானுஜர் நூறாண்டையும் தாண்டி, நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். காஞ்சி மகாசுவாமிகள் நூறாண்டுகள் வாழ்ந்தார். நூறாண்டு வாழ்பவர்களைப் பூரண வாழ்வு வாழ்பவர்கள் என்று சொல்கிறோம்.

இன்றும் நம்மிடையே சிற்சிலர் நூற்று ஐந்தாண்டு, நூற்று ஏழாண்டு என்றெல்லாம் வாழ்வதைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். பொங்கல் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து என்றெல்லாம் வாழ்த்துச் சொல்கிறோம். வாழ்த்து வாசகங்களை அனுப்புகிறோம். மணநாள் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து எனவும் அந்தந்த சந்தர்ப்பங்களில் வாழ்த்துகிறோம்.வாழ்த்து என்றால் என்ன? `வாழ்’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது வாழ்த்து.

நிறையப் பொங்கல்களைக் காணவேண்டும், நிறைய தீபாவளிகளைக் காண வேண்டும், நிறைய மணநாள்களைக் கொண்டாட வேண்டும், நிறையப் பிறந்தநாள்கள் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது சம்பந்தப் பட்டவர்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்பதே பின்னணிப் பொருளாய் நிற்கிறது. நீடுவாழ்வார் என வள்ளுவர் சொன்னபடி, நெடுநாள் வாழவேண்டும் என்பதையே நாம் மற்றவர்களுக்கு நம் அன்பின் வெளிப்பாட்டால் புலப்படுத்துகிறோம்.

உலகின் மொத்த ஜனத்தொகையையும் யார் வயதில் பெரியவர், யார் சிறியவர் எனப் பிறந்த தேதியை வைத்துக் கணக்கிட்டுவிட முடியும். அது கடினமல்ல. ஆனால், யார் முதலில் இறப்பார்கள், யார் நீண்டநாள் வாழ்வார்கள் என்பதைப் பிறந்த தேதியை வைத்தோ, வேறு எந்த முறையிலோ யாரும் முன்கூட்டிக் கணிக்க முடியாது என்பதே மனித வாழ்வின் விசித்திரம்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்திவ் வுலகுஎன்று அதனாலேயே வள்ளுவர் மனித வாழ்வின் நிலையாமை குறித்து எழுதுகிறார்.

“பேசும் தெய்வம்’’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா ஆகியோர் பாடிய வாலியின் திரைப்பாடல் ‘நூறாண்டு காலம் வாழ்க!’ என வாழ்த்துகிறது.

‘நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ்போலே
உலகாண்ட புலவர் தமிழ்போலே…
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவ நிதியாக துள்ளிக்
குதித்தோடும் ஜீவ நதியாக
நீவாழ்க…’

– என்கிறது அந்தப் பாடல்.

நூறாண்டுகள் வாழ்தல் என்பது உணவு முறையாலா, பழக்க வழக்கங்களாலா, மரபணு காரணமாகவா எனச் சரிவர அறிய இயலவில்லை. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதிருப்பது, பசியெடுத்த பின் உண்பது, போதுமான அளவு நாள்தோறும் நித்திரை கொள்வது, நல்ல ஆரோக்கியமான உணவைச் சரியான வேளைகளில் சாப்பிடுவது ஆகியன ஆயுளை நீட்டிக்க உதவக் கூடும். வள்ளுவர் சொன்னபடி புலன்கள் நம் மனத்தைச் செலுத்தும் ஆசை வழியில் செல்லாதிருப்பது, இறையருளைச் சரணடைந்து வாழ்வது ஆகியவை மூலம் நம் வாழ்நாளை நாம் நீட்டித்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

(குறள் உரைக்கும்)

 

The post குறளின் குரல்-நீடு வாழ்வார்! appeared first on Dinakaran.

Tags : Lord ,Thiruppur Krishnan ,Slore ,Dinakaran ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?